-
எம்.ஜி.ஆரின் திரையுலக வெற்றி அசாத்தியமானது. முத்திரை பதிக்கத் தக்க நடிப்பால் கடைக்கோடி மக்கள் மனதிலும் கல்வெட்டாய் பதிந்திருக்கும் எம்ஜி.ஆரின் புகழ் எவராலும் எட்ட முடியாதது. இத்தனைக்கும் அவருடைய சினிமாப் பயணம், தென்றலில் மிதந்து போகும் பறவையைப் போல் இலகுவாய் அமைந்ததில்லை. தமிழக ரசிகர்களின் மனங்களில் கோவிலுக்கு நிகராய் கொண்டாடப்படும் எம்.ஜி.ஆர்., தன் வாழ்வில் சந்தித்த நெருக்கடிகளும், தோல்விகளும் கொஞ்சநஞ்சமல்ல.. தன் தாயின் அறிவுரைக்குக் கட்டுப்பட்டு சைக்கிள் ஓட்டக்கூடக் கற்றுக் கொள்ளாத எம்.ஜி.ஆர்., ஒட்டுமொத்த தமிழகத்தையும் வசீகரிக்கும் சக்தியை எப்படிக் கற்றுக் கொண்டார் என்பது அவரோடு பயணித்தவர்களால் கூட அறிய முடியாத ஆச்சரியம்! எம்.ஜி.ஆரை ஒரு மாபெரும் நடிகராக மட்டுமே மனங்களில் நிறுத்தி வைத்திருப்பவர்கள் எடிட்டிங், திரைக்கதை, ஒளிப்பதிவு, வசனம் என சகல திசையிலும் அவர் சாதனைக் கொடி நாட்டியதை அறிந்தால் ஆச்சரியத்தில் புல்லரித்துப் போய் விடுவார்கள். சினிமா சம்பந்தமான அனைத்து நுணுக்கங்களையும் ஆக்கப்பூர்வமாய்க் கற்றுத் தேர்ந்திருந்த எம்.ஜி.ஆரைப் பற்றி, இந்நூலில் எளிய நடையில் சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார் நூலாசிரியர் எஸ்.விஜயன். எந்தப் பின்புலமும் இன்றி திரைத்துறையில் அடியெடுத்து வைத்த எம்.ஜி.ஆர்., தன் ஆர்வத்தாலும் அனுபவத்தாலும் நிகரற்ற ஜாம்பவானாக சாதித்ததை படிக்கும் போதே நம் பிரமிப்பு கூடுகிறது. வசதியான பொருளாதாரமோ, விஞ்ஞான வளர்ச்சியோ இல்லாத அந்தக் காலத்திலேயே கேமிரா கோணங்களையும், ஒளிப்பதிவு யுக்திகளையும் மட்டுமே பயன்படுத்தி இரட்டை வேடங்களிலும், சண்டைக் காட்சிகளிலும் எம்.ஜி.ஆர். புகுந்து விளையாடியதைப் படிக்கையில் வியப்பில் விழி விரிந்து போகிறது நமக்கு. அதோடு, வசனங்களில் காட்டிய அக்கறை, டான்ஸில் காட்டிய வேகம், முக பாவனைகளில் வெளிப்படுத்திய யதார்த்தம் என எம்.ஜி.ஆரின் அத்தனை திறமைகளையும் நூலாசிரியர் பட்டியலிடும் விதம் சிலிர்க்க வைக்கிறது. சாதாரண மனிதராக நுழைந்து சாதனைத் திலகமாக கொடி நாட்டிய எம்.ஜி.ஆரின் திரைத்துறை வாழ்க்கையைப் படித்து முடிக்கையில் தன்னம்பிக்கை டானிக்கை தாகம் தீர பருகிய திருப்தி ஏற்படும்!
-
This book Ellaam Arintha M.G.R is written by Idhyakani.S.Vijayan and published by Vikatan Prasuram.
இந்த நூல் எல்லாம் அறிந்த எம்.ஜி.ஆர்., இதயக்கனி.எஸ். விஜயன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ellaam Arintha M.G.R, எல்லாம் அறிந்த எம்.ஜி.ஆர்., இதயக்கனி.எஸ். விஜயன், Idhyakani.S.Vijayan, Cinima, சினிமா , Idhyakani.S.Vijayan Cinima,இதயக்கனி.எஸ். விஜயன் சினிமா,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Idhyakani.S.Vijayan books, buy Vikatan Prasuram books online, buy Ellaam Arintha M.G.R tamil book.
|
எம்ஜிஆர்… ஒரு நிகரில்லா மனிதரின் நினைவு நாள்!
-எஸ்எஸ்
‘உன்னை நம்பி எம்புள்ளைய படிக்க வச்சேன்… நீ வேலை தருவியா மாட்டியா?’ – ஏதோ ஒரு குக்கிராமத்திலிருந்து கோபத்துடன் ராமாவரம் தோட்டத்துக்கு வந்து, எந்தக் கட்டுக்காவலுமில்லாமல் வீட்டுக்குள் நுழைந்து எம்ஜிஆரிடம் நேருக்கு நேர் சண்டை பிடிக்கிறார் ஒரு தந்தை. அதைப் புன்னகையுடன் கேட்டுக் கொண்ட எம்ஜிஆர், ‘போங்க… முதல்ல சாப்பிட்டுவிட்டு வாங்க… பேசலாம்’ என்கிறார். ஆனால் அந்த தந்தை கோபம் தணியாமல், ‘இல்ல, நீ எனக்கு பதில் சொல்லு. எம்புள்ளைக்கு வேலை தருவியா மாட்டியா?’
‘போய் சாப்பிட்டுவிட்டு வாங்க. அடுத்த மாசம் உங்க கையில அரசாங்க சம்பளம் இருக்கும்’ என மீண்டும் அதே மாறாத புன்னகையுடன் தலைவர் சொல்ல, அதன் பிறகு சமாதானமாகி சாப்பிட்டுவிட்டு வருகிறார் அந்த பெரியவர்.
உடனே, அவரிடம் விவரங்களை வாங்கிக் கொண்ட எம்ஜிஆர், கையில் ஐந்நூறு ரூபாய் கொடுத்து, பத்திரமாக அவரை பஸ் ஏற்றி அனுப்புமாறு உதவியாளருக்கு கட்டளை இடுகிறார். அன்று அவர் தமிழகத்தின் முதல்வர்… அதுவும் இரண்டாவது முறையாகப் பதவியேற்றிருக்கிறார்!
அடுத்த மாதம் மீண்டும் அதே தந்தை ராமாவரம் தோட்டத்துக்கு வந்தார். இந்த முறை அவர் கையில் மாலை, தேங்காய், பழங்கள்… கூடவே அரசாங்க சம்பள கவர். புன்னகையுடன் அவரை வரவேற்ற எம்ஜிஆர், இப்போதும் அவரை சாப்பிட வைக்கிறார். தாம் கொண்டு வந்ததை எம்ஜிஆர் என்ற கடவுளின் முன் வைத்து கும்பிட்டுவிட்டுப் போகிறார் அந்த தந்தை.
அந்தக் குடும்பம் முதல் முதலாகப் பெற்ற அரசு சம்பளம் அது. இன்றும் அந்தப் பெரியவர் இருக்கிறார். அவர் மனசுக்குள், அந்த குடும்பத்துக்குள், அவர்கள் பூஜையறையில் அதே ஈரத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் எம்ஜிஆர். இப்படி நிறைய தந்தைகள், குடும்பங்கள் தமிழ்நாட்டில் உள்ளன!
இன்றைக்கு ஒரு மாநில முதல்வரை யாராவது இப்படிச் சந்தித்துவிட முடியுமா… உரிமையாக சண்டை போட்டு தனக்கு வேண்டியதைப் பெற முடியுமா… அல்லது இதையெல்லாம் அனுமதிக்கும் பெரிய மனசுதான் யாருக்காவது வருமா?
மனிதருள் புனிதர் என்ற பெயர் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ…. சமகால சரித்திர நாயகரான புரட்சித் தலைவர், பொன் மனச் செம்மல், மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு மிகப் பொருந்தும்… அவர் கருணைப் பார்வையில் நல்ல கல்வியும் வளமான வாழ்க்கையும் பெற்றவர்கள் எண்ணிக்கை கொஞ்சமல்ல.
ஒரு மனிதன் கடவுளை வேண்டுவது பெரும்பாலும் இந்த இரண்டிற்காகவும்தான். அந்த வகையில் வாழ்ந்தபோதே பலருக்கும் கடவுளாகத் திகழ்ந்தவர் பொன்மனச் செம்மல். தமிழை வைத்து பிழைப்பு நடத்தியவர்கள் மத்தியில் தமிழனுக்கு தனி நாடு அமையவே பாடுபட்ட புரட்சியாளர் இந்த பெருமகன்!
அவரைப் பற்றி ஏதாவது சொல்லத் தொடங்கினால்… அல்லது எழுத ஆரம்பித்தால் கண்களை நீர் மறைக்கிறது. இந்த வாழ்நாளில் இன்னொரு முறை இப்படியொரு மனிதரின் அருள் பார்வை கிடைக்குமா? மக்களை மட்டுமே நினைத்த ஒரு தலைவர் கிடைப்பாரா என்ற ஏக்கத்தின் விளைவு அது!
‘என் மனதை நானறிவேன்.. என் உறவை நான் மறவேன்… எதுவான போதிலும் ஆகட்டுமே’ என நெஞ்சில் உரமும் நேர்மைத் துணிவும் கொண்டு தமிழருக்காக பாடுபட்ட தலைவர் அவர்.
பெருந்தலைவர் காமராஜருக்குப் பின் கல்வியின் அருமையை உணர்ந்த ஒரே தலைவர் எம்ஜிஆர்தான். இன்றைய முதல்வர்கள் தனியார் கல்வி கொள்ளையர்களை மட்டுமே ஊக்கப்படுத்துகிறார்கள். ஆனால் எம்ஜிஆர் காலத்தில் மட்டும் திறக்கப்பட்ட அரசுப் பள்ளிகள் 47000!
புதிய அரசுக் கல்லூரிகள், அரசுப் பல்கலைக்கழகங்கள், தமிழுக்கென்று தனிப் பல்கலைக் கழகம், பெண்களுக்கு தனி பல்கலைக்கழகம் என அவர் செய்த கல்விப் புரட்சிக்கு நிகரில்லை.
எம்ஜிஆர் என்றவுடன், தமிழகத்தில் உள்ள படித்தவர், பாமரர், விமர்சகர், பத்திரிகையாளர் என அத்தனை பேருமே ஏதோ ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை- நினைவைப் பகிர்ந்து கொள்வதைப் பார்க்கலாம்.
எம்ஜிஆர் எனும் பெருமழை தந்த ஈரம் இன்னும் கூட வற்றாமல் இருப்பதற்கு சான்று அது!
எம்ஜிஆர் என்ற அரசியல்வாதியை விமர்சித்தவர்கள் கூட, எம்ஜிஆர் என்ற ஈகைப் பெருந்தகையாளரை மனமார வாழ்த்திக் கொண்டேதான் இருக்கிறார்கள். இன்று அவரை விமர்சிக்கும் துணிச்சல் எந்த அரசியல்வாதிக்கும் கிடையாது. காரணம், மக்கள் தங்கள் மனங்களில் அவருக்குக் கொடுத்திருக்கும் சிம்மாசனம் அத்தகையது!
வாழ்ந்த போதும், வாழ்ந்து மறைந்து பின்னும் வாழ்வு தரும் வள்ளல் என்றால், அவர் எம்ஜிஆர் மட்டுமே. வள்ளல்களுக்கு வயதில்லை… என்றுமே வாழ்பவர்கள் அவர்கள்!
(இன்று டிசம்பர் 24 புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நினைவு நாள்)