கட்சி ஆரம்பித்து ஆட்சியைப் பிடிக்கக்கூட எம்ஜி.ஆர். அவ்வளவு கஷ்டப்பட்டு இருக்க மாட்டார். ‘நாடோடி மன்னன்’ படம் எடுத்து முடிப்பதற்குள் நாக்கு வறண்டுவிட்டது. சம்பாதித்த அனைத்தையும் கொட்டி எடுத்த படம் என்பதால், ‘இந்தப் படம் வென்றால் மன்னன், இல்லாவிட்டால் நாடோடி’ என்று அவரது எதிரிகளே ஏளனமாகச் சொன்னார்கள். அடுத்தவர்களின் எதிர்பார்ப்புகளை முறியடிப்பதில் வல்லவரான எம்.ஜி.ஆர்., அந்தப் படத்தில் நடித்தார். அதில் எப்படி ஜெயித்தேன் என்று அவரே எழுதினார்.
எம்.ஜி.ஆர். சினிமாவுக்குள் நுழைந்த ஆரம்பகட்டம் அது. ‘மாயா மச்சீந்திரா’ படப்பிடிப்புக்காகக் கொல்கத்தா போயிருந்த அவர், தன் நண்பர்களுடன் ‘இஃப் ஐ வேர் கிங்’ என்ற ஆங்கிலப் படம் பார்க்கப் போயிருக்கிறார். ரொனால்ட் கால்மேன் நடித்த படம் அது. ஒரு காட்சியில் கால்மேன், ‘நான் மன்னரானால்..?’ என்று பேசுவார். அந்தப் படத்தைப் பார்த்ததிலிருந்து, ‘நான் மன்னனானால்..?’ என்று அடிக்கடிச் சொல்லிக்கொண்டு இருப்பாராம் எம்.ஜி.ஆர். மனதில் பதிந்த அந்தக் கருத்துத்தான் ‘நாடோடி மன்னன்’ படத்தின் கரு. இதைச் சுற்றி கதையும், பாத்திரங்களும் எப்படிப் பின்னப்பட்டன, வசனம், ஒளிப்பதிவு, சண்டைக் காட்சிகள் என எப்படித் திட்டமிட்டு உருவாக்கப்பட்டன என்பதை எம்.ஜி.ஆர். அங்குலம் அங்குலமாக விவரிக்கிறார்.

உட்கருத்தைக் கெடுக்காத கண்ணதாசனின் கதை வசனம், இருந்த வசதிகளை வைத்துத் திறமையாக ஒளிப்பதிவுசெய்த ராமு, மூன்றாவது எடிட்டரான ஜம்பு, படப்பிடிப்பு நிர்வாகி கோவிந்தராஜன் என அனைவரின் திறமைகளும் ஒரு படத்தின் வெற்றிக்கு எத்தகைய அடித்தளம் அமைத்தது என்பதை எம்.ஜி.ஆர். சொல்கிறார். படம் ஜெயித்தால் மொத்தப் பெருமையும் ஒரே ஆளுக்குப் போவதுதான் சினிமா வழக்கம். ஆனால், வெற்றியை அனைவருக்கும் பகிர்ந்தளிக்கிறார் எம்.ஜி.ஆர். ‘நமக்கு மிக அருகில் நம்மோடு சேர்ந்து வாழும் திறமைமிக்கப் பலரை, நாம் கவனிப்பதே இல்லை. பாராட்ட வேண்டியவர்தான் என்று தெரிந்தாலும், பாராட்ட மாட்டார்கள். அவரைப் பாராட்டினால், தான் அவரைவிடத் திறமையில் குறைந்தவரென்றும் தனக்குத் தெரியாததை அவர் செய்து காண்பித்துவிட்டதாகவும் ஏற்றுக்கொண்டதாகிவிடுமே என்ற கீழ்ப்பட்ட எண்ணம்தான் அவர்களை இவ்வாறு இருக்கச் செய் கிறது’ என்கிறார் எம்.ஜி.ஆர். பானுமதி, சரோஜாதேவி, நம்பியார், சந்திரபாபு… என அனைவரையும் பாராட்டுகிறார். ‘புகழ்பெற்ற பிறகும் நல்ல விளம்பரம் கிடைத்த பிறகும், தொழிலில் அக்கறை காண்பிப்பது மிகக் குறைவே’ என்று, சந்திரபாபு பற்றி எம்.ஜி.ஆர். எழுதியிருப்பதை வாசிக்கும்போது, ‘பொன்மனச் செம்மல்’ என்ற பட்டம் அவருக்கு பொருத்தமானதுதான்.
– புத்தகன்
ஏனைய செய்திகள்