”தாழ்ந்த ஜாதியரை நாம் மிதமிஞ்சித் தாழ்த்தி விட்டோம். அதன் பயன்களை நாம் அனுபவிக்கிறோம். ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’. நாம் பள்ளர், பறையருக்குச் செய்ததையெல்லாம் நமக்கு இப்போது அன்னியர்கள் செய்கிறார்கள். நமது சிருங்ககிரிச் சங்கராச்சாரியாரும், வானமாமலை ஜீயர் ஸ்வாமிகளும் நட்டால், திரான்ஸ்வால் தேசங்களுக்குப் போவார்களானால், ஊருக்கு வெளியே சேரிகளில் வாசம் செய்ய வேண்டும். சாதாரண மனிதர்கள் நடக்கும் ரஸ்தாக்களில் நடக்கக் கூடாது. பிரத்யேகமாக விலகி நடக்க வேண்டும். பல்லக்குகள், வண்டிகள் இவற்றைப் பற்றி யோசனையே வேண்டாம்.
நாம் நமக்குள்ளேயே ஒரு பகுதியாரை நீசர்களாகப் பாவித்தோம். இப்போது நம் எல்லாலோரையுமே
உலகத்தார் மற்றெல்லா நாட்டினரைக் காட்டிலும் இழிந்த நீசர்களாகக் கருதுகிறார்கள்” – ‘ஆறிலொரு பங்கு’ என்ற கதையில் ஒரு பாத்திரம் பேசுவதாக பாரதி எழுதிய வரிகள் இவை. இது எழுதப்பட்டு 102 ஆண்டுகள் ஆகிவிட்டன. சாதியின் பெயரால் தர்மபுரித் தீ இன்றும் எரியும் நிலையில் ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் எழுத முடிந்ததுதான் பாரதி இன் னமும் பேசப்பட முக்கியக் காரணம்.
பாரதியின் கவிதைகள் பேசப்பட்ட அளவுக்கு கட்டுரைகள் கவனிக்கப்படவில்லை. கட்டுரைகள் வாசிக்கப்பட்ட அளவுக்கு கதைகள் கவனம் பெறவில்லை. ஒரு படைப்பாளி எந்த வடிவத்தைக் கையாண்டாலும் அவனுடையச் சிந்தனை ஒன்றுதான். நாட்டு விடுதலை, பெண்ணுரிமை, சமூகச் சீர்திருத்தம் ஆகிய மூன்றையும் தன்னுடைய இலக்காக கவிதையில் கையாண்ட பாரதி, அதைத் தன்னுடைய கதைகளுக்குள்ளும் புகுத்தி இருப்பதுதான் கவனிக்கத்தக்கது.
கலப்புத் திருமணம், விதவை மணம் போன்றவை இன்னமும் சர்ச்சை ஆகின்றன. ஆனால், பாரதி இதை வலியுறுத்துவதற்காகவே, ‘சந்திரிகையின் கதை’ எழுதி இருக்கிறார். முற்றுப்பெறாத கதை இது. பாரதி இறந்து 25 ஆண்டுகள் கழிந்த பிறகு சுதேசமித்திரன் அலுவலகத்தில் கையெழுத்துப் பிரதியாக இருந்தது இந்தக் கதை. கதையில் வரும் கோபால ஐயங்கார், காதல் மணமும் கலப்பு மணமும் செய்து கொள்கிறார். இளம் கைம்பெண்களின் பரிதாபமான நிலைமையை விசாலாக்ஷி மூலமாகச் சொல்கிறார். ‘பாரதியார் நம்முடைய விவாக முறைகளில் உள்ள குறைகளையும் ஊழல்களையும் எடுத்துக்காட்டியதுடன், காதல் மணம், கலப்பு மணம் எல்லாவற்றிலும் முக்கியமாகக் கைம்பெண் மறுமணம் – இவற்றைப் பற்றி ஆதரித்து எழுதுவதற்கு ஒரு வாயிலாக இந்த நூலை உபயோகித்து இருக்கிறார்’ என்று பாரதியின் தம்பி சி.விசுவநாதன் சொல் கிறார். சமூகத்துக்கு இன்றும் தேவையாய் இருக்கிறது சந்திரிகையின் கதை.
இந்தியா, சுதேசமித்திரன், சக்ரவர்த்தினி, ஞானபாநு, கதாரத்னாகரம் ஆகிய இதழ்களில் காளிதாஸன், சக்திதாஸன், சாவித்திரி, ஷெல்லிதாஸன் ஆகிய புனைப் பெயர்களில் பாரதி எழுதிய அனைத் துக் கதைகளும் முழுமையாக ஒரே தொகுப்பாகக் கொண்டு வரப்பட்டுள்ளது. ‘அர்த்த புஷ்டியில்லாத அரற்றலின்றி, சொன்னதையே சொல்லிப் பக்கங்கள் நிறைப்பதும் இன்றி, ஸ்படிகம் போன்ற தெளிவும் வைரம் போன்ற உறுதியும் பெற்று இலக்கணப் பிழைகள் ஒழிந்த பேச்சுத் தமிழையே எவ்வாறு ஆழ்ந்த கருத்துக்களை எழுதவும் சித்திரிக்கவும் உபயோகப்படுத்தலாம் என்பதைப் பாரதியாரின் வசன நடையில் நாம் பார்க்கலாம்’ என்று இராஜாஜி ஒருமுறை எழுதினார். இந்தக் கதைகளை வாசிப்பதன் மூலமாக இராஜாஜி சொன்ன உண்மையை உணரலாம்.
ஏனைய செய்திகள்