புத்தகத்தின் பெயர் : தமிழர் கலை வரலாறும் கதைப் பாடல் ஆய்வும்
ஆசிரியர் : நா. வானமாமலை
வெளியீடு :பல்கலைப் பதிப்பகம்
விலை : ரூ.55/-
பக்கம் 104

புத்தக மதிப்புரை:

மார்க்சிய ஆய்வறிஞர் நா. வானமா மலையின் பல நூல்கள் தொடர்ந்து தற்போது அச்சிடப்பட்டு வருவது பாராட்டுக்குரியது. புதிய தலைமுறை ஆய்வுப் பணியில் சீரிய திசையில் நடைபோட இந்நூல்கள் நிச்சயம் வழிகாட்டும். தமிழரின் நாட்டுக் கலைகள், கலைகளின் தோற்றம், தமிழ்நாட்டு கதைப் பாடல்களில் சோக முடிவு என்கிற மூன்று கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். தமிழரின் நாட்டுக் கலைகள் எப்பொழுது தோற்றம் பெற்றன. கலைகளை மனிதன் எதற்காகப் படைத்தான்? அவனுடைய வாழ்க்கையில் கலையினுடைய பணி யாது? போன்ற வினாக்களுக்கு விடைகளை மனிதகுலச் சமூக வளர்ச்சி பற்றி அறிந்திருந்தால் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். இதுகுறித்து இந் நூலில் நா.வ. விளக்கிச் சொல்கிறார். “மனித உருவத்தை அவன் உள்ளத்தில் கொண்டிருந்த நம்பிக்கையின் புறவடிவமாகவே படைத்தான். எனவே அது மிகைப்படுத்தப்பட்டதாக இருந்தது” “பிற்காலத்தில் மனித உறுப்புகளின் வேலைகளை அறிந்து கொண்ட பிறகு தன் உருவமாகவே தெய்வ உருவங்களைப் படைத்தான். தன்னைவிட உயர்ந்த சக்தியுடையவை என்ற நம்பிக்கையில் தெய்வ உருவங்களில் மனித உறுப்புகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் காட்டினான்” இப்படி அறிவியல் கண்ணோட்டத்தில் கலையை நாட்டார் கலையைப் பயில இந்நூல் ஒரு வழிகாட்டி.