-
தென்னிந்தியாவிலே ஊர் சுற்றித் திரிவது என்னுடைய வருடாந்திர
வழக்கங்களில் ஒன்று. படம் பிடிக்கும் கேமராவும் கையுமாக இஷ்டம்போல் அலைந்து
அகப்பட்ட கோயில்களையும் கட்டிடங்களையும் பிடித்து என் பாட்டில்
அனுபவித்துக் கொண்டிருப்பேன். இது என் சொந்தப் பொழுது போக்கு. இரண்டு
வருடங்களுக்கு முன்னர் எனது புகைப்படப் புத்தகத்தைப் பார்த்த என் நண்பர்
ஒருவர், "இந்த மாதிரி அடிக்கடி யாத்திரை செய்யும் நீ உன்
அனுபவங்களையெல்லாம் ஓர் உபயோகமான வழியில் பயன்படுத்தினாலென்ன?" என்று
சொல்லித் தம்வசமிருந்த ஓர் ஆங்கில நூலை எனக்குக் கொடுத்துதவினார். அந்நூல்,
பெயர் பெற்ற யாத்திரை நூலாசிரியரான எச்.வி.மோர்ட்டன் என்பவர் எழுதிய,
"எனது குருநாதன் அடிச்சுவட்டில்" என்பது. ஏசுநாதர் அடிச்சுவதைத் தொடர்ந்து
யாத்திரை செய்து மோர்ட்டன் எழுதினார். அதே முறையை இரவல் வாங்கி நான் இந்த
நூலை எழுதினேன்.
தென்னாட்டிலுள்ள சிவா ஸ்தலங்கள் அனந்தம். இவற்றையெல்லாம்
தனித்தனியாகச் சென்று தரிசித்து ஆங்காங்குள்ள கோயில்களையும் மற்றும் சிற்ப
அழகுகளையும் பார்த்து ரசிப்பதற்கு ஒருவரின் வாழ்நாள் போதாது. மாணிக்கவாசகர்
சரித்திரத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ள ஸ்தலங்கள் பதின்மூன்று.
ஆகையால், ஒரு சமயக்குரவரின் யாத்திரையில் காணப்படும் ஸ்தலங்களையாவது
ஒழுங்கான முறையில் போய்த் தரிசித்தால் நல்லது என்ற கருத்துடனேயே இந்த
யாத்திரை நிறைவேறியது. அவ்வனுபவத்தின் பலனே இந்நூல்.
மாணிக்கவாசகர் வாழ்ந்த காலத்தைப் பற்றியோ அல்லது அவருடைய உண்மையான
சரித்திரத்தைப் பற்றியோ ஆராய்ச்சி செய்வது எனது நோக்கமல்ல. திருவாதவூரடிகள்
புராணத்திலும் திருவிளையாடலிலும் கண்ட கதையை ஆதரமாகக் கொண்டு யாத்திரைச்
சுவைக்கும் கற்பனையழகுக்கும் இடந்தரக்கூடிய முறையில் மாத்திரம் இந்நூல்
எழுதப்பட்டிருக்கிறது. மாணிக்கவாசகர் யாத்திரையில் புராணத்தில்
கூறப்பட்டுள்ள ஸ்தலங்களையடுத்து அவற்றின் வரலாறு, ஸ்தலப் பெருமை, சிற்ப
அழகு முதலியவற்றைச் சாதாரணமாக எவரும் படித்து இன்புற வேண்டுமென்ற
நோக்கத்தோடு, திருவாசகத்தின் பெருமையும் மணிவாசகரின் வாழ்க்கைத்
தத்துவமும், சைவ சித்தாந்தத்தின் சிறப்பும் இந்த யாத்திரைப் பேச்சோடு
பேச்சாகச் சொல்லி வைக்கலாமென்று துணிந்தேன். சரித்திர ஆராய்ச்சியாளரும்,
சிறந்த சமய நூற்புலவரும் திருப்திப்படாவிடினும், பொது வாசகர்கள்
சிறிதளவாவது பயன்பெறுவார்கள் என்ற நம்பிக்கையே இதனை வெளியிடத் தூண்டியது.
-
இந்த நூல் மாணிக்கவாசகர் அடிச்சுவட்டில், சோ. சிவபாதசுந்தரம் அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மாணிக்கவாசகர் அடிச்சுவட்டில், சோ. சிவபாதசுந்தரம், , Aanmeegam, ஆன்மீகம் , Aanmeegam,சோ. சிவபாதசுந்தரம் ஆன்மீகம்,வானதி பதிப்பகம், Vaanathi Pathippagam, buy books, buy Vaanathi Pathippagam books online, buy tamil book.
|