காதலர் தினத்தில் தமிழ் மண்ணே வணக்கம் நிகழ்ச்சி புதுக்கோட்டையில் ஸ்ரீபாரதி கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் அரங்கேறியது. கல்லூரியின் தலைவர் தனசேகரனும், முதல்வர் ஜானகி சுவாமிநாதனும் வரவேற்று நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தனர்.

அரங்கம் மருத்துவர் கு.சிவகுமார் வசமானது. ”நம் உணவில் கலந்திருக்கும் கலப்படங்கள் பற்றி நம் விழிப்பு உணர்வு மிக மிகக் குறைவாக இருக்கிறது. இன்று நம் தமிழகத்தில் 75 சதவிகிதம் பெண்கள் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 35 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் அனைவரும் கட்டாயம் மார்பகப் புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். எப்படி இத்தனை நோய்கள் நம்மைத் தாக்க ஆரம்பித்தது என்றால், எல்லாவற்றுக்கும் அடிப்படைக் காரணம் உணவுப் பழக்கவழக்கம்தான்!

நமது சிறுதானிய உணவுகளை நாம் மறந்துவிட்டோம். கம்பஞ்சோறு எல்லாம் ஏழைகள்தான் சாப்பிடுவார்கள் என்ற எண்ணம் பெரும்பாலானோர் மனதில் உள்ளது. அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் அதுபோன்ற சிறு தானிய உணவுகளை சாப்பிட்டதால்தான் ஆரோக்கியமாக இருந்தனர். நம்மிடம் இருந்து அவல் வாங்கிக்கொண்டு போய் வெளிநாட்டில் டயட் ஃபுட் என்ற பெயரில் திருப்பி நம்மிடம் வியாபாரம் செய்கிறார்கள். சரி, அதிலாவது சத்து கிடைக்குமா என்றால் அதுவும் இல்லை. சுவைக்காக நிறைய கெமிக்கல் சேர்த்து பாக்கெட்டில் அடைத்து விற்பனைக்கு வருகிறது. அதை சாப்பிட்டால் வியாதிதான் வரும். ஒரிஜினல் மாம்பழத்தைவிடப் பல மடங்கு இனிப்பு தரும் என்ற பெயரில் மேங்கோ ஜூஸ் விற்கப்படுகிறது. எல்லாமே கெமிக்கல் எசன்ஸ்தான். நிச்சயம் இது எல்லாமே உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை.

வாரத்துக்கு நான்கு முறையாவது சிறுதானியங்கள், நெல்லிக்கனி, மாதுளை போன்றவற்றை அவசியம் சாப்பிட வேண்டும். இதெல்லாம் நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்திகளைக் கொடுக்கக்கூடியவை. உணவே மருந்தாக நமக்கு இருக்கும்போது தனியாக எதற்கு மருந்து என்பதை உணர்ந்தாலே பல கொடிய நோய்களிடமிருந்து தப்பிக்கலாம்.

மது அருந்துவது தவறான பழக்கம் என்று யாரும் நினைப்பது இல்லை. இன்று மது அருந்துவது ஒரு ஃபேஷனாகவும், சொசைட்டியின் கௌரவமாகவும் பார்க்கப்படுகிறது. சிலர் மது அருந்துவது இதயத்துக்கு நல்லது என்று சொல்கிறார்கள். அது தவறு. எந்த மதுவும் உடல் நலத்துக்கு நல்லது அல்ல. இதயத்துக்கு நல்லது என்றால் முருங்கைக்கீரை சாப்பிடுங்கள்!” என்று பேசி முடித்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், ”பெண்கள் தங்களது உரிமைகளை அர்ப்பணித்து வாழ்கின்றனர். நமது உரிமை மறுக்கப்படும்போது நாம்தான் குரல் கொடுக்க வேண்டும். உரிமையைத் தொலைத்து வாழ்வது அர்த்தமற்றது. டெல்லியில் ஒரு பெண்ணுக்குப் பிரச்னை என்றபோது எல்லோரும் குரல் கொடுத்தார்கள். தமிழகத்தில் ஒரு பெண்ணுக்கு பிரச்னை என்றால் குரல் கொடுக்கும் முதல் ஆளாக நீங்கள் இருக்க வேண்டாமா?

விருந்தோம்பல் என்பதற்குப் பெயர் பெற்ற நாம், இன்று அதை மறந்தே போனோம். மற்றவர்களுக்கு ஒருவேளை சாப்பாட்டுக்குக்கூட உதவி செய்ய நாம் தயாராக இல்லை. சிக்னலில் பிச்சையெடுக்கும் ஒருவருக்கு ஒரு ரூபாய் கொடுக்க யோசிக்கிறோம். அதுவே ஹோட்டலில் சர்வ சாதாரணமாக நூறு ரூபாய் டிப்ஸ் கொடுக்கிறோம். காரணம், அதைக் கௌரவமாக நினைக்கிறோம். இத்தாலியில் ஒரு காபி ஷாப் இருக்கிறது. அந்தக் கடைக்கு யார் காபி குடிக்க வந்தாலும் இரண்டு காபிக்கு பில் வாங்குவார்கள். ஒரு காபியை அவர்கள் குடிப்பார்கள். இன்னொரு காபியின் பில்லை அந்தக் கடையில் உள்ள ஒரு சுவற்றில் ஒட்டிவிட்டுச் செல்வார்கள். அது எதற்குத் தெரியுமா? யாராவது காபி குடிக்க பணம் இல்லாமல் இருந்தால் அவர்கள் சுவற்றில் இருக்கும் ஒரு பில்லைக் கிழித்துக்கொடுத்துவிட்டு காபி குடிக்கலாம். ஒருவர் காபி குடிக்க வரும்போதே மற்றொருவருக்கான பணத்தையும் கொடுத்துவிட்டுச் செல்கிறார்கள். இப்படியாக என்றோ ஒருநாள் யாரோ ஒரு இல்லாதவன் காபி குடிக்க இன்றே பணம் கொடுத்துச் செல்வதை இத்தாலி மக்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.

நான் ஜப்பான் சென்றிருக்கிறேன். அந்த மக்களுக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. வெளியில் எங்கு சென்றாலும் அவர்கள் கையில் எப்போதும் புத்தகங்கள் இருக்கும். இரும்பு அடிக்கும் வேலைசெய்பவன்கூட பயணிக்கும் நேரத்தில் புத்தகம் படிப்பான். வாசிக்கும் பழக்கம்தான் ஒருவனை சிறந்த மனிதனாக்கும் என்பதை ஜப்பான் மக்கள் உணர்ந்துள்ளனர். வாசிப்பு பழக்கம் உங்களையும் உயர்த்தும். இந்த சமூகத்தையும் உயர்த்தும்” என்று முடிக்கும்போது கரகோஷத்தில் அரங்கம் அதிர்ந்தது.

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் சிறந்த கட்டுரைகளை எழுதிய மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

நமது அடுத்தப் பயணம் பெரம்பலூர்…!

Thanks: Vikatan