பத்துப்பாட்டு ஆராய்ச்சி – மா.இராசமாணிக்கனார்; பக்.688; ரூ.365; சாகித்ய அகாதெமி, குணா பில்டிங், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18.
சங்கத் தொகை நூல்களுள் ஒன்று பத்துப்பாட்டு. திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகியவை பத்துப்பாட்டு நூல்கள். ஆற்றுப்படை இலக்கியங்கள் பற்றிய ஆராய்ச்சி, ஐவகை நிலங்கள், நாடுகள், அரசர்கள், பாட்டுடைத் தலைவர்கள், பாணர், விரலி போன்ற இசைவாணர்கள், ஐவகை நிலங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை, அவர்களின் தொழில், வாணிகம், உணவு, பழக்க வழக்கங்கள், விளையாட்டுகள், சமயம், அழகுக்கலைகள், மரம், செடி, கொடி, விலங்குகள் முதலியவை பற்றிய ஆழமான ஆய்வாக மலர்ந்திருக்கிறது. மிகவும் நுட்பமான, ஆழ்ந்தகன்ற ஆராய்ச்சி என்றால், பேரறிஞர் வையாபுரிப்பிள்ளைக்கு அடுத்து, பேரறிஞரான டாக்டர் இராசமாணிக்கனாருடையதாகத்தான் இருக்கும். எழுத்தெண்ணி ஆராய்ந்திருக்கிறார்; நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ந்திருக்கிறார்.
“உண்மையான ஆராய்ச்சியாளனுக்கு நடுநிலைமையே உயிர். இவ்வுண்மைக்கு உரைகல்லாயும் இந்நூல் விளங்குகிறது’ என்று துணைவேந்தர் நெ.து.சுந்தரவடிவேலு வழங்கியுள்ள அணிந்துரை (9.7.1970) ஆய்வுக்கும் ஆய்வாளருக்கும் அணிக்கு அணிசேர்த்திருக்கிறது.
“பத்துப்பாட்டு’ தொடர்பான பல சந்தேகங்களுக்கும் சிக்கல்களுக்கும் இதில் தீர்வு உள்ளது. குறிப்பாக பத்துப்பாட்டில் இடம்பெற்றுள்ள அரிய சொற்களும் பிறமொழிச் சொற்களும் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தமிழ் இலக்கியச் சொல்லாராய்ச்சிக்கும் பெரிதும் உதவும். இந்நூல் யார் யாரிடமெல்லாம் அவசியம் இருக்க வேண்டும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை!
ஏனைய செய்திகள்