மதுரையின் மூத்த பத்திரிகையாளர்களில் முதன்மையானவர் இந்நூலாசிரியர் ப.திருமலை. மார்க்சிய சிந்தனை சான்றிதழ் படிப்பு முடித்தவர். வழக்கறிஞர். பல்வேறு நாளிதழ், வார இதழ்களில் பணியாற்றியவர். தற்பொழுதும் தொடர்ந்து பல்வேறு நூல்களை எழுதி வருபவர்.
அந்திமழை என்ற மாதம் இருமுறைவரும் இதழில் மதுரையைப் பற்றிய வரலாறுகளை தொடராக எழுதிய கட்டுரைகளை தற்பொழுது சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம் நூலாக வெளியிட்டுள்ளது.
இந்நூல் ராணி மங்கம்மாளைப் பற்றிய அத்தியாயத்தில் துவங்கி மதுரை அரிவாள் அரசியல் என்ற அத்தியாயத்தோடு முடிகிறது. உள்ளபடியே மதுரை நகர் மற்றும்
புறநகர் பகுதிகளில் நடந்த சம்பவங்களையும், மதுரை மாவட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகளையும், மதுரை மாவட்ட அரசியல்வாதிகளுடனான தமது அனுபவங்களையும் படம் பிடித்துள்ளார்.
இதில் குறிப்பிடத்தக்கது பல்வேறு இயக்கங்களைப் பற்றிய அரிய செய்திகளாகும். குறிப்பாக, கம்யூனிஸ்டுகள், அவர்கள் உருவாக்கிய தொழிற்சங்கங்கள், பெருங்காமநல்லூர் கலவரம், மொழிப்போர், டெசோ மாநாடு, கருணாநிதியின் திருச்செந்தூர் நடைபயணம், காங்கிரசுடன் இணைந்த தமாகா ஆகிய வரலாறுகளும் அடங்கும்.
அண்ணல் காந்தியார், பி.டி.ராஜன், ரோஜாப்பூ துரை, கக்கன், மௌலானா சாகிப், கே.பி.ஜானகியம்மாள், சொர்ணத்தம்மாள், பத்மாசினி அம்மையார், என்.எம்.ஆர்.சுப்புராமன், தூக்குமேடை பாலு, ஐ.மாயாண்டி பாரதி, லீலாவதி என மதுரைமாவட்டத்தை சேர்ந்த தியாகிகள், தலைவர்கள், பிரமுகர்களை அவர் எழுதி
யிருக்கும் விதம் அலாதியானது.
336 பக்கங்கள் கொண்ட இந்நூலில், 66 பக்கங்களில் மதுரையில் கம்யூனிஸ்ட் அமைப்பு உருவானது, அதன் தலைவர்கள், அவர்களது போராட்ட வரலாறு என
எழுதியிருப்பது இன்றைய இளம் தலைமுறை கம்யூனிஸ்டுகள் அவசியம் படிக்க வேண்டியதாகும். வயதானவர்கள் மீண்டும் தங்களது நினைவுகளை அசை போட்டுக்கொள்ள உதவுவதாகும்.
அன்றிலிருந்து இன்றுவரை தமிழகத்தின் நிர்வாக தலைநகரமாக சென்னை இருப்பினும், அரசியல் தலைநகரம் மதுரை தான் என்று சொல்லப்படுவதும் உண்டு. அதற்கேற்றாற்போலும் மதுரையின் வரலாற்றை நூலாசிரியர் தொகுத்துள்ளது பாராட்டுக்குரியதாகும்.
மதுரைக்கு வருகை தந்த காந்திஜி 4 முழவேட்டி அணிய துவங்கியதிலிருந்து பின்னர் நடைபெற்ற ஆலய பிரவேசம், தொழிற்சங்க அமைப்புகள் உருவாக்கம், நேதாஜியின் மதுரை வருகை, அவருக்கு ஜானகியம்மாள் தலைமையில் வரவேற்பு, பசும்பொன் தேவரின் அரசியல், கைரேகை சட்டத்தை எதிர்த்த வீரஞ்செறிந்த போராட்டம் என்ற வரலாறு நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.
தியாகசீலர் கக்கனின் வரலாறு இனி இன்னொரு கக்கன் இப்படி வருவாரா என்று நம்மை ஏங்கச்செய்கிறது. அத்துடன் சொர்ணத்தம்மாள், பத்மாசினி என்ற இரு பெண்மணிகளின் சுதந்திரப் போராட்ட வரலாறும் நமக்கு உந்துசக்தியாக அமைகிறது. பத்மாசினி அம்மையார் வாழும் காலத்திலேயே அவருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் 1935ல் துவக்கப்பட்ட படிப்பகத்தை இன்றுவரை தொய்வின்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இப்படி அரிய, பெரிய செய்திகள், வரலாற்று நிகழ்வுகள் ஏராளமாக இந்நூலில் இருப்பினும் மதுரையின் அரிவாள் அரசியல் மனதை நெருடத்தான் செய்கிறது. வேலைவாய்ப்புகள் இல்லாததொரு சமூக சூழலில் கூலிக்கு கொலை செய்யும் வேலைகள் நீக்கமற எல்லா இடங்களிலும் உள்ளன. அவை சமீபத்தில் கூடுதலாகியுள்ளன. இதையும் சேர்த்து நூலாசிரியர் பதிவு செய்திருந்தால் சமூக அவலங்களை வாசகர்கள் புரிந்துகொள்ள கூடுதல் உதவியாக இருந்திருக்கும்.
ஏனைய செய்திகள்